எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். அதே போன்று நாம் அமைக்க இருக்கும் வீட்டிற்குத் தலைவாசல் பிரதானம். தலைவாசல் என்பது அந்த வீட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும்.

1. கிழக்கு திசை பார்த்த வீடு :

கிழக்கு பார்த்த வீட்டிற்கு முன்பாக நின்று வலதுபுறம் முதல் இடப்புறம் வரை (ஈசான்ய முதல் அக்னிவரை) 9 பிரிவுகளாகப் பிரிக்க வேண்டு அதைச் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று முறையே பிரிக்க வேண்டும். இதில் சந்திரன் பகுதியிலும் மற்றும் புதன், குரு, சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.

கிழக்கு தலைவாசல் கொண்ட இல்லத்தில் தலைவாசல் வடகிழக்குத் திசையை நோக்கி இருக்கும்படி கட்டினால் செல்வம் வளரும். தென்கிழக்கு திசை நோக்கி வாசல் அமைத்தால் பல சிக்கல்கள் உண்டாகும். நெருப்பால் அச்சம், கடன், ரோகங்கள் போன்றவை ஏற்படும்.

2. தெற்கு திசை பார்த்த வீடு :

தெற்கில் தெரு இருந்து தெற்கு திசை நோக்கித் தலைவாசல் அமைக்கும்போது, கிழக்கிலிருந்து மேற்காக வீட்டின் சுவரை ஒன்பது பகுதிகளாக்கி, கிழக்கிலிருந்து முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என ஒன்பது கிரகங்களுக்கும் பங்கிட வேண்டும். சந்திரன் அல்லது புதன், குரு, சுக்கிரன் பகுதியில் தலைவாசல் வைத்துக் கொள்வது நன்மைகள் தரும்.

தெற்குத் திசையில் தலைவாசல் இருக்கும்போது, அதற்கு நேராக வடக்கில் ஒரு வாயில் இருக்க வேண்டும். தெற்கில் மட்டும் ஒரு வாயில் அமைக்கக் கூடாது. மேற்கு வாயில் வைக்கக் கூடாது.

இந்தத் திசையில் வாயில் வைக்கும்போது வாயில் தென்மேற்குத் திசையை நோக்கி வைத்தால் பகைவரால் துன்பம், குலநாசம் அகால மரணம் போன்ற துன்பங்கள் ஏற்படும் தென்கிழக்குத் திசை நோக்கி அமைத்தால், நெருப்பால் அல்லது ஆயுதத்தால் தீங்கு எனப் பல துன்பங்கள் தரும். எனவே, சரியாகத் தெற்கு நோக்கியே அமைக்க வேண்டும்.

தெற்கு நோக்கிய வீட்டில் தெற்குப் பகுதி வீட்டை உயர்த்தி மாடி கட்டி வசித்தால் செல்வம் மிகும். தெற்கு வாசல் வீட்டிற்கு மழைநீர் மற்றும் வீட்டில் உபயோகிக்கும் நீர் முதலியவை வடக்கு நோக்கிச் செல்லும்படி நீரோட்ட வழி அமைக்க வேண்டும். கிழக்குப் பகுதியில் காலியிடம் அதிகமிருந்தால் ஆண் சந்ததி உண்டு. வடக்கில் காலி இடம் அதிகமிருந்தால் செல்வச் செழிப்பு உண்டு.

3. மேற்கு திசை பார்த்த வீடு :

வீட்டின் முன்புறம் நின்று, தெற்கு முதல் வடக்காக 9 சம பாகங்களாகப் பிரித்து, முறையே சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது என்று பங்கிட வேண்டும். சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.

மேற்கு நோக்கிய இல்லத்தின் தலைவாசல் சரியாக மேற்கு நோக்கி அமைக்க வேண்டும். தென்மேற்கு நோக்கியோ, வடமேற்கு நோக்கியோ இருக்கக் கூடாது. தீய பலன்கள் கொடுக்கும்.

4. வடக்குத திசை பார்த்த வீடு :

வடக்குத திசை கொண்ட கட்டடங்களில் தலைவாசல் அமைக்குபோது கட்டடத்திற்கு வடபுறம் நின்று மேற்கிலிருந்து கிழக்காக 9 பாகம் செய்ய வேண்டும். முன்பு கூறியது போன்று சந்திரன் பகுதியிலும், குரு, புதன், சுக்கிரன் பகுதியிலும் தலைவாசல் அமைக்க வேண்டும்.

சூரியன் முதலாகக் கேது வரையிலான பகுதிகளில் நடைவைத்தால் ஏற்படும் பலன்களைப் பார்ப்போம்.

 1. சூரியன் – ஆதாயம் குறையும் தாய்க்கும், பிள்ளைக்கும் கருத்து
  வேறுபாடு சண்டை சச்சரவுகள் உண்டு.
 2. சந்திரன் – விருத்தியும், தாழ்ச்சியும் மாறி வரும்.
 3. செவ்வாய் – மனைவிக்கு ஆகாது. எதிரிகள் பயம் உண்டு.
 4. புதன் – லட்சுமி கடாக்ஷம், கல்வியறிவு மிகும்.
 5. குரு – தனதான்ய சம்பத்து, ஆபரணச் சேர்க்கை.
 6. சுக்கிரன் – நீண்ட ஆயுள், சுபபலன்கள், யோகபாக்கியம்
 7. சனி – பொருள் நாசம், வழக்கு, கலகம்.
 8. ராகு, கேது – கட்டடம் அடிக்கடி கைமாறும், தீய பலன்கள்
  கொடுக்கும்.

எனவே, புதன், குரு பகுதியில்தான் வைக்க வேண்டும். மிகுந்த நன்மை பயக்கும். சுக்கிரன் பகுதி தியேட்டர்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு அமைக்கலாம். பெண்கள் ஆதிக்கம் மிகும். மற்றப் பகுதிகளில் கூடாது.